டெல்லி:

நாடாளுமன்ற லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷாதாக்கல் செய்துள்ள நிலையில், ஹிட்லரின் வரிசையில் அமித்ஷாவின் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதாக , இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி காட்டமாக பேசினார்.

கடந்த பாஜக ஆட்சியின்போது, நிறைவேற்ற முடியாத குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் வகையில், இன்று பாராளுமன்றத்தின் மக்களவையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதன்படி,  பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான்  போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்துள்ள இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் வகையிலும், இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் வகையிலும்  குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மசோதா குறித்து பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி ,  சபாநாயகர் ஓம்பிர்லாவிடம், “இந்த குடியுரிமை மசோதாவிலிருந்து நாட்டையும், உள்துறை அமைச்சரையும் காப்பாற்றுங்கள். இல்லையெனில், இனத்தை அடிப்படையாக கொண்ட குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய ஹிட்லரின் வரிசையில் அமித் ஷாவின் பெயரும் இடம்பெற கூடும்”  என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும், அதிமுக கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளது.