வங்க தேச பிரதமர் வருகையும் அமித்ஷாவின் கடுமையான பேச்சும்

கொல்கத்தா

ங்க தேச பிரதமர் ஷேக் அசீனா நாளை இந்தியப் பயணம் வர உள்ள நிலையில் அமித்ஷாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு சட்டவிரோதமாகக் குடியேறி உள்ள வெளிநாட்டினரை நாட்டை விட்டு அனுப்ப முடிவு செய்தது.   அதனால் தேசிய குடியுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.   அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியலின் இறுதி வடிவம் சென்ற மாத இறுதியில்  வெளியானது.  இந்த பட்டியல் நாட்டில் உள்ள சட்டவிரோதமான வங்க தேச குடிமக்களைத் திரும்ப  அனுப்ப அமைக்கப்பட்டுள்ளதாகக் கருத்துக்கள் எழுந்தன.

யு என் பி என்னும் வங்கதேச செய்தி ஊடகம்,  “ஐநா சபை பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போது வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவின் தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்து கவலை தெரிவித்தார்.   அதற்கு இந்தியப் பிரதமர் மோடி இதில் கவலையடைய ஏதும் இல்லை எனக் கூறி உள்ளார்.  மேலும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள் என மோடி தெரிவித்துள்ளார்” எனச் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”வங்க தேச குடிமக்களுக்கும் ஊடுருபவரகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.  ஊடுருவியவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.   உத்திரப் பிரதேச காவல்துறையினர் அம்மாநிலத்தில் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ” எனத் தெரிவித்துள்ளார்.

வங்க தேச பிரதமர் ஷேக் அசீனா நாளை இந்தியாவுக்கு வர உள்ள நிலையில்  அமித்ஷா இவ்வாறு பேசியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பல ஆர்வலர்கள் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை தவறாக வங்க தேச குடிமக்கள் என அடையாளம் காண்பதால் இந்தப் பிரச்சினை உண்டாவதாகத் தெரிவித்துள்ளனர்.