சென்னை,

பாரதியஜனதா தேசிய தலைவரான அமித்ஷா இரண்டாவது முறையாக தமிழக சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாரதியஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷா, கட்சியை வளர்ப்பதாக கூறி,  நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள மாநில கட்சிகளை உடைத்து, மாற்று கட்சி நிர்வாகிகளை தங்களது கட்சிக்கு இழுத்து, பாரதியஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக காட்டி வருகிறார்.

இதற்காக நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரில் இருந்து ஏற்கனவே  பயணத்தைத் தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைக் குறிவைத்து இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியாக தமிழகத்தில் பயணம் செய்வதாக அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த மே 10ம் தேதி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக  அவர் தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது தமிழகத்தில் பாரதியஜனதாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகாததால் அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நாளை (22ந்தேதி) மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் வருவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை பாரதிய ஜனதாவுடன் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

நெல்லையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாரதியஜனதாவுடன் இணைய இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், அதிமுகவில் தற்போது இரு அணிகளும் இணைய இருப்பதால், பாரதியஜனதா வில் இணைய முயன்ற அதிமுகவினரிடையே  குழப்பங்கள் நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அமித்ஷாவின் பயணம் தேவையற்றதாகி, அவரது முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற பயம் காரணமாக, அவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.