மும்பை: மராட்டிய மாநிலத்தில் தவித்து வந்த 700க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்க அனுப்பி வைப்பதற்காக, நடிகர் அமிதாப் பச்சன் ஜூன் 10ம் தேதி நான்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தார்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அமிதாப் பச்சனின் சொந்த மாநிலமும் உத்திரப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத் தலைநகர் மும்பையில் பல்வேறு புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கி இருப்பதும், ஊர் திரும்ப அவர்களுக்கு உதவி தேவைப்படுவதும் நடிகர் அமிதாப் பச்சனின் கவனத்திற்கு வந்தது. எனவே, அமிதாப்பினுடைய உத்தரவின் பேரில், அவரது ஏபி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் யாதவ் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தார்.

மும்பையில் இருந்து, உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத், கோரக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை காலை தலா 180 பயணிகளுடன் இந்த விமானங்கள் கிளம்பிச் சென்றன.

புலம்பெயர் தொழிலாளர்களுடன் மேலும் இரண்டு விமானங்கள் இன்று புறப்படும் என்று அமிதாப் பச்சனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் மஹிம் மற்றும் ஹாஜி அலி தர்க்காக்களுடன் இணைந்து 10 பேருந்துகளில் 300 புலம்பெயர் தொழிலாளர்களை லக்னோ, அலகாபாத், படோஹி மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற இடங்களுக்கு அமிதாப் அனுப்பி வைத்தார். அமிதாப் பச்சன் செய்த இந்த பெரிய உதவியால் நெகிழ்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், அவருக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.