அரசியலில் ஒருபோதும் நுழையக்கூடாது என நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு அறிவுரை வழங்கியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின்  167வது படமாக உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். படத்தின் டிரெய்லர் மாலை 6.30 மணிக்கு வெளியான நிலையில், இந்நிகழ்வில் அமிதாப் பச்சன் தனக்கு 3 அறிவுரைகளை வழங்கியதாக ரஜினி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நடிகரும், எனது நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் எனக்கு 3 அறிவுரைகளை வழங்கியிருந்தார். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் பிசியாக என்னை வைத்துக்கொள்ள வேண்டும், அரசியலில் நுழையக் கூடாது ஆகிய 3 அறிவுரைகள் தான் அது. இதில் முதல் இரண்டை கடைபிடிக்க முடிந்த என்னால், 3வது அறிவுரையை கடைபிடிக்க முடியாமல் போய்விட்டது” என்று தெரிவித்தார்.

காலமாக 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அரசியலில் நேரடியாக தாமே களமிறங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஓராண்டாக பேசிவருவது குறிப்பிடத்தக்கது.