ரூ.5.5 கோடி: 850 விவசாயிகளின் கடனை அடைத்த அமிதாப்

மும்பை:

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப், கடந்த ஆண்டு முதல் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளின் கடன்களை அடைத்து உதவி செய்து வருகிறார்.

நாடு முழுவதும் பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் தாங்கள் விவசாயத்திற்காக வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர். மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் விவசாயிகள் கடன்தள்ளுபடி செய்யக்கோரியும் கடனை தள்ளுபடி செய்யாததால் அவர்கள் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

இதன் காரணமாக மன வருத்தம் அடைந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள், ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போதைய ஆண்டில் சுமார் 850 விவசாயிகளின் கடன் தொகையான ரூ.5.5 கோடி அளவிலான பணத்தை செலுத்தி அந்த விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்.

இதுகுறித்து அமிதாப் தனது முகநூல் வலைதளத்தில் எழுதியுள்ள பதிவில்,  நம்முடைய நாட்டைச் சேர்ந்தவர்கள் நமக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யும்போது அவர்களுக்காக நாம் ஏதாவது செய்வது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

கடந்த ஆண்டு 350 விவசாயிகள் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தார்கள். அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தி தற்கொலை செய்யும் முடிவிலிருந்து தடுத்தேன். அதில் ஆந்திரா, விதர்பா பகுதிகளின் விவசாயிகளின் கடனும் அடங்கும்.

இந்த ஆண்டு 850 விவசாயிகளை உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்து அவர்களின் ரூ.5.5 கோடி விவசாயக் கடனை வங்கியில் செலுத்தி இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர்களின் வாழ்க்கையை புதிதாகத் தொடர கடன் உதவிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன்.

இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

அமிதாப் கடந்த ஆண்டு 350 விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் தொகை  சுமார் 2 கோடி 50 லட்சம் ரூபாய் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.