பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை : கருத்து சொல்ல மறுத்த அமிதாப்

மும்பை

பிரபல பாலிவுட் நடிகரும் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ இயக்கத்தின் தூதுவருமான அமிதாப் பச்சன் தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

மோடி அரசு ‘பெண் குழந்தைகளை காப்போம்’ என்\னும் இயக்கம் ஒன்றை ஆட்சிக்கு வந்ததும் தொடங்கியது.   அதற்கு நாடெங்கும் ஆதரவு பெருகியது.   பல சமூக ஆர்வலர்களும்,  அரசியல் வாதிகளும்,  திரையுலகம் உள்ளிட்ட பல்வேறுத் துறை பிரமுகர்களும் ஆதரவை அள்ளித் தந்தனர்.

இந்த இயக்கத்துக்கு நல்லெண்ண தூதுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்றார்.   அவர் இந்த இயக்கத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.   இந்த இயக்கத்தின் மூலம் பெண் குழந்தைகள் நலனை பாதுகாக்க முடியும் எனவும்  பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கு இந்த இயக்கம் பெரிதும் பலனளிக்கும் எனவும் கூறினார்.

சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் ஒரு எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ள்ளார்.    அதற்கு நாடெங்கும் கண்டனங்களும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன.   இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் அமிதாப் பச்சனின் கருத்தை கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், “எனக்கு இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிப்பது கூட வெறுப்பேற்றும் செயலாக உள்ளது.   இந்த பிரச்சினையை யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.    இதைப் பற்றி பேசுவது கூட பயங்கரமானது”  என பதில் அளித்துள்ளார்.

’பெண் குழந்தைகளை காப்போம்’ இயக்கத்தின் தூதுவர் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை பற்றி பேசுவதே பயங்கரமானது எனக் கூறியது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.