புதுடெல்லி: பல கட்சி ஜனநாயகம் நாட்டில் வெற்றி பெற்றுள்ளதா? என்ற சந்தேகம் நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ளது என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அத்தகைய ஜனநாயகம் நமது இலக்குகளை அடைவதற்கு துணைபுரியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மக்கள் இந்த தோல்வியால் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு, இந்தியா சர்வாதிகாரத்தன்மையை நோக்கி விரைவாக பயணிக்கிறதா? என்று சந்தேகம் எழுப்புவதாகவே உள்ளது.

ஏற்கனவே, இந்திமொழி குறித்து அவர் பேசிய சர்ச்சை அடங்காத நிலையில், தற்போது இந்தியாவில் நிலவும் பலகட்சி ஜனநாயகம் குறித்து அவர் பேசியுள்ள பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியுள்ளதாவது, “உலகின் பல ஜனநாயகங்களை ஆய்வுசெய்து, நமது அரசியல் சட்ட பிதாமகன்கள் பல கட்சி ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தினர். மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று சுகமாக வாழ வேண்டுமென்ற நோக்கத்தில் அவற்றை செய்தனர்.

ஆனால், நடந்தது என்ன? கடந்த ஆட்சி காலங்களில் எத்தகைய பெரிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஊழல் குறித்த செய்திகள் வந்தன, எல்லைகள் பாதுகாப்பற்றவையாக இருந்தன, நமது வீரர்கள் கொல்லப்பட்டனர், நமது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது, தெருவெங்கும் அடிக்கடி மக்களின் போராட்டமாக இருந்தது.

ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களை பிரதமராக நினைத்துக் கொண்டனர். ஆனால், எங்களின் அரசு பதவியேற்ற 5 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட 50 பெரிய முடிவுகளை மேற்கொண்டோம். நாங்கள் வாக்கு அரசியலுக்கான முடிவுகளை மேற்கொள்ளாமல், நாட்டின் முன்னேற்றத்திற்காகவே முடிவுகளை மேற்கொண்டோம்” என்று பேசியுள்ளார்.