பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாமலேயே ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகத்தில், கடந்தாண்டு நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா, ஒருசில இடங்கள் குறைந்ததால் பெரும்பான்மையை தவறவிட்டது. ஆனால், காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் எதிர்பாராமல் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துவிட்டன.

எனவே, எப்படியேனும் அந்த ஆட்சியைக் கவிழ்த்து, தான் ஆட்சியில் அமர வேண்டுமென பாரதீய ஜனதா முயற்சித்தாலும், இதுவரை முடியாத காரியமாகவே உள்ளது. இந்நிலையில்தான், மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சியமைந்துள்ளதை அடுத்து, கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியை தீவிரப்படுத்துமாறு உள்துறை அமைச்சரும், பாரதீய ஜனதா தலைவருமான அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, தேர்தலை சந்திக்காமல், காங்கிரஸ் மற்றும் தேவகெளடா கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, அதன்மூலம் பெரும்பான்மை எண்ணிக்கையில் ஆட்சியைப் பிடிப்பது தொடர்பான முயற்சியை தீவிரமாக மேற்கொள்ள, கர்நாடக பாரதீய ஜனதாவினருக்கு மேலிருந்து உத்தரவு பறந்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.