கமதாபாத்

பாஜக தலைவர் அமித்ஷா பல பணக்கார நிறுவனங்களின் பல கோடி மதிப்புள்ள பங்குகள் வைத்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கமாக இந்த தொகுதியில் பல முறை வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் அத்வானி ஓரங்கட்டப்பட்டு அவருக்கு பதில் அமித்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் அளித்த வேட்பு மனுவில் அமித்ஷா தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தற்போது 57 வயதாகும் அமித்ஷாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களான ரூ. 30.49 கோடியில் பல புகழ்பெற்ற நிறுவனங்களின் பங்குகள் ரூ. 17.56 கோடி மதிப்பில் உள்ளன. இதில் ரூ. 2.15 கோடியில் பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் உள்ளன.

இதை தவிர டிசிஎஸ் நிறுவன பங்குகள் ரூ.1.06 கோடி மதிப்பிலும், அல்டிரா டெக் சிமிண்ட் பங்குகள் ரூ.97 லட்சத்துக்கும், எச்யுஎல் பங்குகள் ரூ.83 லட்சம், எல் அண்ட் டி நிதி நிறுவன பங்குகள் ரூ.78 லட்சம், மாருதி சுசுகி ரூ.65 லட்சம் பிஅண்ட்ஜி ரூ.62 லட்சம் எம் ஆர் எஃப் ரூ.56 லட்சம், கோல்கேட் ரூ.50 லட்சம், ஐடிசி ரூ.45 லட்சம் மற்றும் கிராசிம் ரூ.22 லட்சம் என பங்குகள் உள்ளன.

மொத்தம் 200 அங்கீகாரம் பெற்ற நிறுவன பங்குகளை வைத்துள்ள அமித்ஷா இதைத் தவிர 80 அங்கீகாரம் பெறாத நிறுவன பங்குகளை வைத்துள்ளார். அத்துடன்  விவசாய நிலம் ரூ. 1.25 கோடி மதிப்பிலும் விவசாயம் அல்லாத நிலம் ரூ.6 கோடி மதிப்பிலும் வைத்துள்ளார். அவர் மனைவி சோனால்பென் பெயரில்  சொத்துக்கள் மட்டும் ரூ.3.90 கோடி உள்ளது.   அது மட்டுமின்றி சோனால்பென் தங்கநகைகள் ரூ.35.29 லட்சம் மதிப்பிலும் வைரக்கற்கள் போன்றவை ரூ.63.34 லட்சத்துக்கு வைத்துள்ளார்.