டில்லி:

காஷ்மீரில் மேலும் 6மாதம் குடியரசுதலைவர் ஆட்சியை நீட்டிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன்முதலாக பாராளுமன்ற மக்களவையில் மசோதா தாக்கல் செய்தார்.

87 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி கடந்த ஒரு வருடமாக  நடைபெற்று வருகிறது. அதை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் வகையில் மக்களவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதா தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய மித் ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்து வருவதால் அடுத்த  6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், . அங்கு தற்போது சட்டம் – ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தீவிரவாதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகள் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர். அங்கு 6 மாதங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அதற்கான சூழலை உருவாக்கி வருகிறோம் என்று கூறினார்.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி 2 முறையாக சுமார் 1 ஆண்டு காலம்  நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நீட்டிக்க வேண்டும் என்றால்  நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இந்த நிலையில், அமித்ஷா அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத் தில்  தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையில்,  நடப்பு ஆண்டின் இறுதியில்மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும்,  தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமர்நாத் யாத்திரை முடிந்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்க ஆளுநர் சத்யபால் மாலிக் பரிந்துரைத்துள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.