ஜெய்ஷா – மோடி – அமித் ஷா

டில்லி

மித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வந்த கம்பெனியின் வர்த்தகம் நரேந்திர மோடி பிரதமரான பின் ஒரே வருடத்தில் 16000 மடங்கு உயர்ந்துள்ளது.

பா ஜ க தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா டெம்பிள் எண்டர்பிரைசஸ் என்னும் ஒரு நிறுவனத்தை 2004ஆம் வருடம் நிறுவியுள்ளார்.  அதன் இயக்குனர்களாக ஜெய் ஷா மற்றும் ஜிதேந்திர ஷாவும் பங்கு தாரராக அமித்ஷாவின் மனைவி சோனால் ஷாவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.   இந்த நிறுவனம் வருடா வருடம் தனது வர்த்தகம் குறித்து நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிந்து வருகிறது.

அந்த பதிவில் காணப் படுவதாவது.

கடந்த 2013-14ஆம் வருடம் வரை டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு அசையா சொத்துக்கள், முதலீட்டாளர்கள்,  அல்லது கையிலுள்ள சரக்கு என எதுவும் இல்லை.  அந்த வருடம் வருமான வரி திருப்பி பெறப்பட்ட வகையில் ரூ.5796 மட்டுமே வருமானம் ஆகும்.   2014-15ஆம் வருடம் அந்த நிறுவனம் ரூ.50000 வருமானம் ஈட்டி உள்ளது.  ஆனால் அடுத்த 2015-16ஆம் வருடம் அந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.80.5 கோடியாக உயர்ந்துள்ளது.   அதாவது ஒரே வருடத்தில் 16000 மடங்கு அல்லது 16லட்சம் சதவிதம் அதிகரித்துள்ளது.   முந்தின வருடம் வியாபாரத்தில் வர வேண்டிய பணமாக இருந்த ரூ.5618 ஒரே வருடத்தில் ரூ.2.65 கோடியாக உயர்ந்துள்ளது.   கையிருப்பு மற்றும் வர வேண்டிய மொத்தத் தொகை ரூ.80.2 கோடியாகி உள்ளது.

இந்த வருமான உயர்வுக்கு காரணமாக பொருட்களின் விற்பனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில் வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து ரூ. 51 கோடி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   முந்தைய ஆண்டில் அது போல வருமானம் ஒன்றும் இல்லை.

அந்த வருடம் ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்திடம்  (KIFS Financial servive) இருந்து ரூ.15.78 கடன் பெற்றதாகவும் அதில் இருந்து ரூ. 7 கோடி திருப்பித் தரப்பட்டதாகவும் கூறி உள்ளது.   ஆனால் அந்த ஃபைனான்ஸ் நிறுவனம் இந்த கடன் பற்றியும், திரும்பி வந்த பணம் பற்றியும் தனது அறிக்கையில் தெரிவிக்கப் படவில்லை.   இது குறித்து சில பத்திரிகையாளர்கள் விசாரித்த போது ஃபைனான்ஸ் நிறுவனம் விரைவில் பதிலளிப்பதாகவும்  ஜெய் ஷாவின் நிறுவனம் பதில் ஏதும் அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

அந்த ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் கந்த்வாலா வின் மகள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பரிமள் நத்வானியின் மகனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.   பரிமள் நத்வானி அரசியலிலும் உள்ளவர்.  முதலில் மக்களவையில் சுயேச்சை உறுப்பினராக இருந்தவர்.   ஆனால் அவருடைய பதவிக் காலத்தில் அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என பலரின் வெறுப்பை பெற்றவர்.   ஆனால் 2014ஆம் ஆண்டு பா ஜ க வின் ஜார்கண்ட் மாநில உறுப்பினர்களின் உதவியுடன் மீண்டும் பதவியை அடைந்துள்ளார்.   இதற்கு அடுத்த வருடம் இவருடைய சம்மந்தி கந்த்வாலா என்பவர் அமித்ஷா மகனுக்கு கடன் உதவி அளித்துள்ளார்.

இது குறித்து ஜெய்ஷாவின் நிறுவன சட்ட ஆலோசகர் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.  ”டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நடப்பு மூலதனத்தை அந்தக் கம்பெனியின் இயக்குனர்கள் ஜெய் ஷா மற்றும் ஜிதேந்திரஷா ஆகியோரால் ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் அவர்களின் குடும்ப நன்பரான ராஜேஷ் கந்த்வாலாவிடம் இருந்து கடன் பெற்றுள்ளனர்.  அதன் மூலம் வர்த்தகம் விரிவடைந்ததால் அந்தக் கடனில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுத்துள்ளனர்.   இதற்கும் பரிமள் நத்வானிக்கும் சம்மந்தம் இருப்பதாக கூறப்படுவது வெறும் கட்டுக்கதை” என அந்த அறிக்கையில் உள்ளது.     ஆனால் இந்த கடன் பற்றி ராஜேஷின் நிறுவன அறிக்கையில் குறிப்பிடாததைப் பற்றி எந்த பதிலும் தரவில்லை.    அத்துடன் நிறுவனம் கையில் நடப்பு மூலதனத்துக்கும் வழி இல்லாத நிலையில் வெறும் ரூ.15.78 கோடி கடனில் எவ்வாறு ரூ.80.5 கோடி வருமானம் பெற்றது என்பதைப் பற்றியும் சொல்லவில்லை.

கம்பெனி பதிவாளருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் டெம்பிள் எண்டர்பிரைசஸ் உணவு தானியங்களை விற்பதின் மூலம் இந்தத் தொகையில் 90% வருமானம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.   இவை அனைத்தும் ஜெய்ஷாவின் கல்வியாலும் ஜிதேந்திர ஷாவின் வர்த்தக அனுபவத்தாலும் ஈட்டப்பட்ட வருமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் ஜெய் ஷாவின் சட்ட ஆலோசகர் இந்த வருமானம் என்பது சாதாரணமான வருமானம் என தெரிவித்துள்ளார்.   ஆனால் இந்தக் கல்வி, வியாபார அனுபவம் ஆகியவை இத்தனை நாட்களாக ஏன் இந்த நிறுவனத்துக்கு இவ்வளவு வருமானம் ஈட்டித் தரவில்லை என்னும் கேள்விக்கும் விடை இல்லை.

இது தவிர ஜெய் ஷா  குசும் ஃபின்செர்வ் லிமிடெட் என மற்றும் ஓர் நிருவனத்தில் பார்ட்னராக உள்ளார்.  முதலில் பிரைவேட் லிமிடெட் ஆக இருந்த இந்த நிறுவனம் பின்பு லிமிடெட் ஆகியது.  இந்த நிறுவனத்துக்கு ரூ.2.6 கோடி ரூபாய் 2014-15ஆம் வருடம் டிபாசிட்டாக கிஃப்ஸ் ஃபைனான்ஸ் நிருவனத்திடம் இருந்து வந்துள்ளது.   குசும் நிறுவனம் பங்கு வர்த்தகம் செய்து வருவதாகவும் அதற்கு கிஃப்ஸ் அடிக்கடி கடன் தருவது வழக்கம் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.   பங்கு விற்பனை மட்டுமே முக்கிய தொழில் என சொல்லிக் கொள்ளும் குசும் ஃபின்சர்வ் மத்தியப் பிரதேசத்தில் ரூ.15 கோடி மதிப்பில் ஒரு காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் நடத்த ரூ.25 கோடி முதலீடு ஜெய் ஷா மற்றும் அவர் தந்தை அமித்ஷாவின் பல சொத்துக்களை அடகு வைத்து பெறப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளது.    ஆனால் அடகு வைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பாக ரூ. 7 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.   இதில் அமித் ஷாவுக்கு சொந்தமான 2002 சதுர அடி நிலமும் ஆகும்,   இதன் மதிப்பு ரூ. 5 கோடி என கொடுக்க்கப்பட்டுள்ளது.    இது தவிர காற்றாலை மின்சாரத்துக்காக அரசு நிறுவனமான மாற்றுச் சக்தி ஆய்வு நிறுவனத்திடம் இருந்து இதே காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனத்தைக் காட்டி ரூ. 10.35 கோடி கடன் இதே நிறுவனம் பெற்றுள்ளது.

இது குறித்து செய்திகளை வெளியிட்ட ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு ஜெய்ஷாவின் சட்ட ஆலோசகர் ஒரு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.  அதில், “ஜெய்ஷா சட்டபூர்வமாக தொழில் நடத்தும் ஒரு இந்தியர்.  அவருடைய வியாபாரங்கள் எல்லாம் சட்டத்துக்குட்பட்டு சரியான கணக்கு வழக்குகளுடன் நடைபெறுகிறது. அவர்  தவறாக ஏதும் செய்துள்ளார் என்பது கற்பனையாகும்.   மேலும் இவை எல்லாம் அவர் மேல் உள்ள பொறாமையாலும் அவர் நற்பெயரைக் கெடுக்கவும் செய்யப்படும் சதியாகும்.   இது அவருடைய தனிப்பட்ட உரிமையை பறிப்பதாகும்.  இது மேலும் தொடர்ந்தால் அவர் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பார்” என எச்சரிக்கப் பட்டுள்ளது.

Courtesy : THE WIRE

The Golden Touch of Jay Amit Shah