சென்னை:

மிழகத்தில் கொரோனா நோய்தோற்று அதிகமாக உள்ள ராயபுரத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட முதிய தம்பதிகள் உணவு அருந்திய அம்மா உணவகம், அவர்கள் ரேசன் பொருட்கள் வாங்கிய ரேஷன் கடையையும் அதிகாரிகள் மூடி உள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொரோனா தொற்று அதிகம் உள்ள இடமாக ராயபுரம் பகுதி அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராயபுரம் அடுத்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பயண வரலாறு இல்லாத முதிய தம்பதியினர்  இருமல் காய்ச்சல் காரணமாக மாநகராட்சி கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டு,  தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் உள்ள கார்ப்பரேஷன் மாதிரி சோதனை மையத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வசித்த பகுதி முடக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக அவர்கள் இருவரும் அருகில் உள்ள அம்மா கேண்டீனுக்கு சென்று உணவு சாப்பிட்ட தாகவும், அருகே உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருள் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த அம்மா கேன்டீனில் வேலைபார்ப்போர் மற்றும், அவரது வீடு அருகே உள்ளவர்களுக்கு கொரோனா சோதனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அம்மா உணவகம், ரேசன் கடை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.