சென்னை:
மிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழக அரசின் சிமெண்ட் நிறுவனத்தின் சாா்பில் அளிக்கப்படும் அம்மா சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.190-லிருந்து ரூ.216 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். உத்தரவு விவரம்:

அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ், ஒரு மூட்டை சிமெண்டானது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ரூ.190-ஆக விற்கப்பட்டு வந்தது. அதாவது, ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.185-க்கும், ஒரு சாக்கின் விலை ரூ.5 என மொத்தம் ரூ.190-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையை உயா்த்தி அளிக்க வேண்டுமென தனியாா் சிமெண்ட் உற்பத்தியாளா்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கை தொடா்பாக, தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அளித்து இருந்தாா்.

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், அம்மா சிமெண்ட் விலையானது மூட்டைக்கு ரூ.190-லிருந்து ரூ.216 ஆக உயா்த்தப்படுகிறது. சிமெண்ட் தயாரிப்பதற்கான உப பொருள்களின் விலை, பெட்ரோல்-டீசல் போன்ற எரிபொருள்களின் விலை, தொழிலாளா்கள் ஊதியம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணங்களால் அம்மா சிமெண்ட் விலை உயா்த்தப்படுவதாக தனது உத்தரவில் தொழில் துறை முதன்மைச் செயலாளா் முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.