சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் சேலத்தில் முகாமிடுகிறார். அப்போது அம்மா கிளினிக் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திறப்பு, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

சென்னையில் இருந்து  சேலம்  வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர், சேலம் மாநகர், ஓமலூர் சாலையில் இன்று (16.12.2020) டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய கிளையினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து,  கரூர் சென்று மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தியும், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். தொடர்ந்து, இன்று இரவு மீண்டும் சேலம் திரும்புகிறார்.

நாளை சேலத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் சென்று ஆய்வு நடத்தும் முதல்வர் மீண்டும் இரவு சேலம் திரும்புகிறார்.  வரும் 20ம் தேதி வரை சேலத்தில் தங்கியிருக்கும் முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

பின்னர், 20ம் தேதி காலை பயணிகள் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பிச் செல்கிறார்.

சேலத்தில் முகாமிடும், முதல்வர்   சேலம் கொண்டாலம்பட்டி, லத்துவாடி, ஏ.வாணியம்பாடி, சீரங்கனூர், இருப்பாளி ஊராட்சி, வெள்ளார் நாயக்கன்பாளையம், ஆலச்சம்பாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய 8 இடங்களில் மினி கிளினிக்குகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.

19–ந் தேதி மேட்டூர் வட்டம், பெரியசோரகையில் அருள்மிகு சென்றாய பெருமாள் கோவில் மண்டல பூஜையில் முதல்வர் கலந்து கொள்கிறார். அன்று மாலை 4.15 மணிக்கு எடப்பாடியில் கட்சி அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.