சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வீட்டிலேயே  தனிமைப்படுத்திக் கொள்ளும் நோயாளிகள், கொரோனா பாதிப்பு குறித்து கண்டறிய குறைந்த விலையில் சிறப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் நலனுக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக “அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு” சேவை திட்டத்தினை, சலுகை விலையில் (ரூ.2500) 14 நாட்களுக்கான மருத்துவ தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலமாக “அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு” சேவை திட்டத்தின் கீழ், சலுகை விலையான 2,500 ரூபாயில், 14 நாட்களுக்கான தொகுப்பாக, ஒரு பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ஒரு டிஜிட்டல் தெர்மாமீட்டர் கருவி, 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரணம் மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 சிங்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை அடங்கிய பெட்டகங்களை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அலுவலருக்கு பெட்டகத்தை வழங்கி துவக்கி வைத்தார்.

இதன்மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வருவதோடு, தீவிர நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கும் ஏதுவாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.