சென்னை:

‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்புக்காக பிங் கலர் காவல்துறை ரோந்து வாகன ம் விரைவில் செயல்பாட்டு வர உள்ளது.  இதற்காக பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டு உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களிடம்  அத்துமீறி நடந்துகொள்பவர்கள் குறித்து, இந்த பாதுகாப்பு வாகனத்தின் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அடுத்த சில நிமிடங்களில் ஸ்பாட்டுக்கு வந்து நடவடிக்கை எடுக்கும். இதற்காக புதிய  பிங்க் கலர்  ரோந்து வாகனத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது .

இந்த ரோந்து காவல் வாகன சேவையை விரைவில் தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முதல்கட்டமாக சென்னை மக்களின் பாதுகாப்பு பணிக்காக 35 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த அம்மா ரோந்து வாகனத் திட்டம்  படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த அம்மா பேட்ரோல்  பிங்க் கலர் ரோந்து வாகனத்துக்கென மாவட்டந்தோறும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள்  மகளிர் காவல்நிலையத்துடன்  இணைத்து செயல்படும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த அம்மா பேட்ரோல் பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். . இந்த பிரிவுதான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் சேர்த்து விசாரித்து வருகிறது.

இந்த அம்மா பேட்ரோல் உதவியை நாடும் குழந்தைகள் 1098 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும், பெண்கள் 1091 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும் அழைக்க வேண்டும்.

பெண்களை பாதுகாக்கும் நோக்கிலும், பெண்களை கேலி செய்வது, செயின் ஸ்நாச்சிங் போன்ற எந்தவொரு தகவல் கிடைத்தாலும், அடுத்த  சில நிமிடத்தில் அதிரடியாக களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு இருப்பதுதான் அம்மா பேட்ரோல் என்று காவல்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதுபோன்ற   பிங்க் நிற வாகன திட்டம் கேரளாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.