முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் துவக்கி வைத்த உன்னத திட்டமான அம்மா மருந்தகம்  இன்று மூடப்பட்டு வரும் அரங்கேறி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு  ஜூன் 26 அன்று அப்போதய தமிழக முதல்வர் ஜெயலலிதா முதன் முதலாக அம்மா மருந்தகத்தை  திறந்து வைத்தார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு என்ற வரிசையில்  அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டது.

அப்போது பேசிய ஜெயலலிதா, போலி மருந்து, மாத்திரைகளை ஒழிக்கும் வகை யிலும், குறைந்த விலையில் தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கும் நோக்கிலும்,  நியாயமான விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படும் என  தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழக கூட்டுறவுத்துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும்  அம்மா மருந்தங்கள் திறக்கப்பட்டு வந்தன. இங்கு .  குறைந்த விலையில், சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்பட அனைத்து வகையான மருந்துகளும்  விற்பனை செய்யப்பட்ட வந்தது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த உன்னத திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தூத்துக்குடியில் அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டு சுமார்  250 நாட்களில்  2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, தனியார் மருந்தங்களின்  சாதனையை முறியடித்தது.

இவ்வாறு சாதனை செய்து வந்த அம்மா மருந்தகங்கள், தற்போதைய தமிழக  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் திறமையின்மை காரணத்தாலும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தாலும் இன்று  செயல் இழந்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நல்ல நிலையில் செயல்பட்டு வந்த அம்மா மருந்தகம், அவரது மரணத்துக்கு பிறகு, மரண குழிக்குள் தள்ளப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும், கூட்டுறவுத்துறையால், கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஆங்கில மருந்துகள், 15 முதல், 20 சதவீதம் வரையிலும், ‘ஹார்லிக்ஸ், பூஸ்ட்’ உள்ளிட்ட உணவு பொருட்கள், 5 சதவீதம் வரையிலும், விலை தள்ளுபடி செய்யப்படுகின்றன. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த மருந்தகங்கள்,  , கூட்டுறவு நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் மருந்தாளுனர்களின் அதிருப்தியால், பல கடைகள், ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன.

அமைச்சர் செல்லூர் ராஜு – ஜெயலலிதா

இந்த கடைகளுக்கு  கூட்டுறவு துறையால், வேலை வாய்ப்பு பெற்ற, பி.பார்ம், டி.பார்ம் படித்த, மருந்தாளுனர்களின் பட்டய படிப்பு சான்றிதழ்கள் களால், மருந்தகத்திற்கான உரிமம் பெறப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. தமிழகம் முழுவதும் சுமார் 300 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஊழியர் பற்றாக்குறை  மற்றும் குறைந்த சம்பளம் காரணமாக பல கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த கடைகளில், சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இவர்களுக்கு ஊதியமாக குறைந்தது ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டும், மருந்து விற்பனைக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கூட்டுறவுத்துறையோ, முதலில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.7 ஆயிரம் சம்பளம் மட்டுமே வழங்கி வந்தது. அவர்களுக்கு ஊதிய உயர்வோ, ஊக்கத்தொகையோ வழங்காமல் தகிடுத்தனம் செய்து வந்தது. மேலும், அவர்களின் வேலையை நிரந்தரம் செய்வது குறித்தோ, வேலைக்கு உத்தரவாதமோ வழங்க மறுத்து வருகிறது.

இதுதவிர, விற்பனைக்காக, மருந்து விற்பனை நிறுவனங்களிடம், குறித்த நேரத்தில் மருந்து வாங்குவதற்காக, கூட்டுறவுத் துறை, உரிய பணத்தை கொடுப்பதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.  இதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வேலையில் இருந்து விலகியதால், சென்னையில் இயங்கி வந்த சுமார்  50க்கும் மேற்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது செயல்பட்டு வரும் ஒருசில  அம்மா மருந்தகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனால், தமிழக அரசோ, கூட்டுறவுத்துறையோ,  இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், மக்களின் நலனில் அக்கரை கொண்டு ஜெயலலிதா கொண்டு வந்த உன்னத திட்டத்துக்கு மூடுவிழா நடத்தி வருகின்றனர்.

சிறப்பாக செயல்பட்டு வந்த அம்மா மருந்தகங்களில், இதுவரை, 797 கோடி ரூபாய்க்கு, மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவு துறை கொள்கை விளக்க குறிப்பில்  தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2017 – 18ம் ஆண்டில், 154.38 கோடி ரூபாய் அளவுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும்,  2018 – 19ம் ஆண்டில் இந்த விற்பனை மேலும் உயர்ந்து  159.39 கோடி ரூபாய்க்கு மருந்து விற்பனை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள அம்மா மருந்தகங்கள், அமைச்சர் செல்லூர் ராஜூவின் நிர்வாக திறமையின்மை காரணத்தாலும்,  அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இன்று சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

குறைந்த விளையில் நோயாளிகளுக்கு சிறப்பு மருந்துகளை வழங்கும் அம்மா மருந்தகங்களை தமிழக அரசு சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், மக்களின் ‘உயிரோடு விளையாட வேண்டாம் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்களின் சுகாதாரத்தை பேணிய ஜெயலலிதாவின் உன்னதமான திட்டத்தை சீர்படுத்த தமிழக முயற்சி செய்யுமா? அல்லது ஒரேடியாக மூடு விழா நடத்துமா? பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்…