நியூஸ்பாண்ட்:

க்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய “அம்மா” இருசக்கர மானிய திட்டம் திரும்பப் பெறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க 20 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு மானியத்தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தது தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு.

இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அளிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அங்கேய பெறப்பட்டன. இதையடுத்து அந்த அலுவலகங்களில் பெண்களின் கூட்டம் அலைமோதியது.

மேலும், விண்ணப்பத்துடன் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் இணைக்கப்பட வேண்டும் என்பதால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பெண்கள் கூட்டம் திரண்டது. வழக்கத்தைவிட மூன்று மடங்கு விண்ணப்பங்கள் அங்கு தினமும் அளிக்கப்பட்டன.

இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி தேதி.  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி மானியம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இத்திட்டம் நிறுத்தப்படும் என்கிற யூகத்தகவல் பரவியிருக்கிறது.

இது குறித்து கோட்டை வட்டார உயரதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுவதாவது:

“இதுவரை சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வாகனத்தின் விலையில்   50 சதவீதம்  அல்லது ரூ. 25,000 இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையை அரசு மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது எந்தவொரு இருசக்கரவாகனமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்து இல்லை. ஆகவே வாகனத்துக்கு நிச்சயமாக 25 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கும்படி இருக்கும்.

ஆகவே பத்து லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் என்றால், 2500 கோடி ரூபாய் இதற்கு செலவாகும்.

ஆனால் தற்போது தமிழக அரசு கடனுக்கு வட்டி கட்ட விழி பிதுங்கி வருகிறது.கடந்த ஆண்டு 21 ஆயிரத்து 600  கோடி ரூபாயாக வட்டிஅதிகரித்துள்ளது.  இதனால்  வளர்ச்சித் திட்டங்கள்    எதுவும்    நிறைவேற்றப்படவில்லை.   அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை.

இந்த நிலையில்  , 2,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு என்றால், ஏற்கெனவே கடன் சுமையால் தள்ளாடும் தமிழக அரசின் நிதிநிலை மேலும் அதள பாதாளத்துக்கச் செல்லும். சொல்லப்போனால் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்கு ஆளாகும். ஆகவேதான் இத்திட்டத்தை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. மத்திய நிதித்துறை அமைச்சக உயரதிகாரி தமிழக உயரதிகாரியை தொடர்புகொண்டு பேசியதாக தகவல் பரவியிருக்கிறது.

அதே நேரம், திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் அப்படியே விட்டுவிடலாம் என்று ஒரு எண்ணம் உயர் மட்டத்தில் ஓடுகிறது.

இன்னொரு புறம், ஒட்டுமொத்தமாக பத்து லட்சம் வாகனங்கள் வாங்குவதால், அந்த நிறுவனங்களில் பேசி விலையை கணிசமாக குறைத்து வாங்கலாம். அந்த நிறுவனங்களிடம் பேசி ஏதேனும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாம் என்றும் ஒரு திட்டம் உயர் மட்டத்தில் இருக்கிறது” என்கிறது கோட்டை வட்டாரம்.

அடுத்ததாக, “மாவட்டத்துக்கு சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று அறிவித்து ஒதுங்கிக்கொள்ளலாம்” என்ற திட்டமும் இருக்கிறதாம்.