உள்ளாட்சி தேர்தலில் பொதுச்சின்னம்: அமமுக நிர்வாகிகள் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு

சென்னை:

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அமமுக நிர்வாகிகள் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சியாகிவிட்டதால், இனிமேல் அனைத்து தேர்தல்களிலும் பங்குகொள்ள முடியும், அதுபோல பொதுவான சின்னம்  கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் என்று டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். இதில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளருக்கு பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைத்திடம் தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை கட்சியின் பொருளாளர் வெற்றிவேல், தேர்தல் பிரிவு செயலாளர் சந்திரன், கட்சியின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் ஆகியோர் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் வழங்கினார்கள்.

You may have missed