அமமுக கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் மார்ச் 8, 9ந்தேதிகளில் நேர் காணல்…

சென்னை:  டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில்   போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் மார்ச் 8, 9 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அமமுகவுக்கு சசிகலா தலைமையேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் துறவறம் பூண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் அரசியலில் இருந்து விலகியது சரியான முடிவு என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், சசிகலாவை நம்பியிருந்த டிடிவி தினகரனின் அமமுக அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் சக்தியாக அமமுக திகழும் எதிர்பார்க்கப்படும் நிலையில், சசிகலா விலகல், அமமுகவுக்கு சரிவையே கொடுக்கும் என நம்ப்படுகிறது.

இந்த நிலையில், அமமுகவில்  வழக்கம்போல் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,  தேர்தலில்  போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் மார்ச் 8, 9 தேதிகளில் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 3.3.2021 முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

6.4.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு 7.3.2021 – ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படவிருக்கின்றன. விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனைத்தொடர்ந்து விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வரும் 8.3.2021 மற்றும் 9.3.2021 ஆகிய இரு நாட்களிலும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.