குறையும் நாட்டு மாடுகள், அதிகரிக்கும் வெளிநாட்டு கலப்பின மாடுகள்: அறிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள கால்நடைகளைக் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து இடைக்கால அறிக்கை வெளியான நிலையில், நாட்டு மாடுகளின் எண்ணிக்‍கை கணிசமாக சரிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இடைக்கால அறிக்கையில் மாடுகளின் எண்ணிக்கைக் குறித்து கூறப்பட்டுள்ளதாவது; 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 16 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 13.98 கோடியாக சரிந்துள்ளது.

ஆனால், கடந்த 1992ம் ஆண்டு நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 18.93 கோடி. அதே காலகட்டத்தில் இருந்த வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 1.52 கோடி. அந்த எண்ணிக்கை தற்போது 5.14 கோடியாக உயர்ந்துள்ளது. இது 238% வளர்ச்சியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சத்தான பால் தரும் எருமை மாடுகளை வளர்ப்பதும் பொருளாதார ரீதியாக லாபம் இல்லை என்று மக்கள் கருதுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருட்களின் தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நிலையில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் வளர்ப்பதையே பெரும்பாலானோர் லாபகரமாக கருதுகின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மாடுகளின் பால் மற்றும் இறைச்சி ஆகியவை ஒப்பீட்டு அளவில் அதிக சத்தானவை மற்றும் ஆரோக்கியமானவை. ஆனால், அரசுகள் மேற்கொள்ளும் விவசாயத்திற்கு எதிரான நடவடிக்கைகள், நகர்பபுற பெருக்கம், மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவது, ஒப்பீட்டளவில் குறைவான அளவே பால் கறப்பது உள்ளிட்டவைகளால் பெரும்பாலான விவசாயிகள் அந்த மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை.

கார்ட்டூன் கேலரி