வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒருநாள் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து வந்தது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது, ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் நேற்று ஒருநாள் மழை இல்லாமல், ஈரோடு மாவட்டத்தில் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைய தொடங்கியது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 8,500 கன அடி நீர் வந்துக்கொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி 9,086 கன அடி நீர் வந்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரம் அணையிலிருந்து தொடர்ந்து, 8,421 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டி.எம்.சியாகவும் உள்ளது.