துருக்கி நாட்டுக்கு உதவி புரியும் அமெரிக்க நேச நாடான கத்தார்

தோஹா

துருக்கி நாட்டுக்கு அமெரிக்காவின் நேச நாடான கத்தார் $ 15 பில்லியன் அதாவது ரூ. 1 லட்சத்து ஆறு ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு நிதி உதவி அளிக்க உள்ளது.

அரபு நாடுகளில் கத்தாருடன் அமெரிக்காவுக்கு வெகுநாட்களாக நட்பு உள்ளது.   எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஒன்றான கத்தாருக்கு அமெரிக்கா பல பாதுகாப்பு உதவிகள் அளித்து வருகிறது.  அமெரிக்கப் படைகள் தங்க கத்தார் நாடு இடமளித்துள்ளது.    அத்துடன் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக உறவும் உள்ளது.

சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.   அமெரிக்கா கடந்த இரு வருடங்களாக தராமல் வைத்திருந்த நிதியையும் தர மறுத்துள்ளது.  இதனால் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு மிகவும் சரிந்துள்ளது.   அதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

இந்நிலையில் துருக்கியில் அமெரிக்காவின் நேச நாடான கத்தார் 15 பில்லியன் அமெரிகா டாலர் அளவுக்கு முதலீடு செய்து உதவ உள்ளதாக தெரிவித்துள்ளது.  வளைகுடா நாடுகளிலேயே மிகச் சிறிய நாடான கத்தார் இவ்வாறு அறிவித்தது உலக நாடுகளிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இது குறித்து பொருளாதார வல்லுநர்கள், “இந்த முதலீட்டு நிதி வழங்குவதன் மூலம் மக்களிடையே ஒரு சில கேள்விகள் எழுந்துள்ளன.   அமெரிக்க நாட்டுக்கு தெரிந்தே இந்த நிதி உதவியை கத்தார் வழங்குகிறதா ?  அப்படியானால் அமெரிக்கா இது குறித்து என்ன சொல்லப் போகிறது?  அல்லது அமெரிக்காவுக்கு அறிவிக்காமலே இந்த உதவியை வழங்க கத்தார் தீர்மானித்துள்ளதா? அப்படியெனில் அமெரிக்காவுடனான நீண்ட நாள் உறவை கத்தார் முறித்துக் கொள்ளப் போகிறதா?” என கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து கத்தார் மற்றும் அமெரிக்க அரசு எவ்வித கருத்தும் கூறவில்லை.