பெங்களூரு:

ர்நாடக மாநிலம் பெங்களுரு அருகே உள்ள அமிர்தா பொறியியல் கல்லூரியில் படித்துவந்த 4வது ஆண்டு மாணவர் தற்கொலை செய்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என்று மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பெங்களூருக்கு அருகிலுள்ள சவனஹள்ளியில்  அமிர்தா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு  4 வது ஆண்டு பொறியியல் மாணவர் ஹர்ஷா நேற்று மாலை மரணம் அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த மாத இறுதியில் கல்லூரியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்பட வில்லை என்றும், உணவு சரியில்லை, தண்ணீர் வசதி இல்லை என்றும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது, கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரிக்கு சொந்தமான ஆறு பேருந்துகளின் விண்ட்ஸ்கிரீன்கள் மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹர்ஷா குற்றத்தை ‘ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தவறு செய்ததாக வேறொரு மாணவர்  ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முன்வந்தபோதிலும், கல்லூரி நிர்வாகம், அந்த  சம்பவத்தில் சம்பந்தப்படாத ஹர்ஷாவை திட்டமிட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தி வந்த கல்லூரி அதிகாரிகள் 45 மாணவர்களை இடைநீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்லூரி அதிகாரிகளின் துன்புறுத்தல் காரணமாக வளாகத்தில் ஹர்ஷா நேற்று மாலை விடுதியில்  தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோபமடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தங்கள் நண்பருக்கு நீதி வேண்டும் என்று கோரி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கல்லூரிநிர்வாகம் அழைப்பின் பேரில் கல்லூரி வளாகத்திற்குள் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு போதுமான உணவு மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டும் மாணவர்கள்,  ஹர்ஷா எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்  படித்து வருவதாகவும்,  அவர் கூச்ச சுபாவமுள்ளவர், அவர் பேருந்து உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர்.

மாணவர் ஹர்ஷா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கல்லூரி நிர்வாகத்தினர் அவரை கொலை செய்துவிட்டனரா என்றும் சில மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஹர்ஷா மரணத்தை ஒரு விபத்து எனக் கல்லூரி நிர்வாக  கூற முயன்றதாகவும், சி.சி.டி.வி காட்சிகளை அகற்ற முயற்சித்ததாகவும் சில மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், கல்லூரிமீது பிரிவு  306 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் பிரிவு 201 (குற்றம் சாட்டப்பட்ட சான்றுகள் காணாமல் போதல் அல்லது தவறான தகவல்களை வழங்குதல்) ஆகியவற்றின் மீது பரப்பனா அக்ரஹாரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக டி.சி.பி இஷா பந்த் உறுதிப்படுத்தினார்.

இந்த அமிர்தா பொறியியல் கல்லூரியானது,  கேரளாவைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர் அமிர்தானந்தமாயின் கீழ் அமிர்தா விஸ்வ வித்யபீதம் நடத்தும் பல நிறுவனங்களில் ஒன்று. பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.