கவனக்குறைவால் ஏற்பட்டது அமிர்தசரஸ் ரயில் விபத்து: பஞ்சாப் அமைச்சர் சித்து

பஞ்சாப்:

மிர்தசரஸ் அருகே நடைபெற்ற கோர  ரயில் விபத்து கவனக்குறைவால்தான் நிகழ்ந்துள்ளது; வேண்டு மென்றோ, உள்நோக்கத்துடனோ விபத்து நிகழவில்லை என்று பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறினார்.

நவராத்தி பண்டிகையின் இறுதிநாளான நேற்று ராவணன் எரிக்கப்பட்ட விழாவின்போது நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அமிர்தசரஸில் நடந்த ரயில் விபத்திற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று அனைத்து அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 61க்கும் மேற்பட்டோர் உயிரிளந்துள்ளனர். விபத்து குறித்து அறிந்த பிறகு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவில் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார்.

இதையடுத்து,  அமிர்தசரஸ்-மனவாலா இடையே 8 ரயில்கள் ரத்து செய்யப்ப்டடு உள்ளது.  5 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கபட்டு வருகிறது.

விபத்துக்கு காரணமாக நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டது என்றும், விழாவில் கலந்து கொண்ட  அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த சம்பவம் நடைபெற்றதும், சித்துவின்  மனைவி உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள  சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

மேலும், இது விபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும் எனவும், இது உள்நோக்கத்துடனோ, வேண்டும் என்றோ நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததாலேயே இந்த கோர  விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.