சென்னை:
சென்னை மக்களின்  தேவைக்காக கூடுதலாக 14 நடமாடும் காய்கறி கடைகளை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் சில மணி நேரம் மட்டுமே திறந்ததிருக்கும் நிலையில், மக்களின் வசதிக்காக தமிழகஅரசு நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று மேலும், 14 நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர்,  தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 305 நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 2,380 டன் காய்கறிகள் ரூ.6.36 கோடிக்கு விற்பனையாகி  உள்ளது.
19 மளிகைப் பொருட்கள் அடங்கிய, ரூ.500 மதிப்பிலான 2 லட்சத்து 45 ஆயிரத்து 854 மளிகை தொகுப்பு பைகள் ரூ.12.29 கோடிக்கு விற்பனையானது என்றும்  கூறினார்.
தமிழகம் முழுவதும் தற்போது 305 நடமாடும் பண்ணைப் பசுமை கடைகள் 1,194 இடங்களில் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் டி.யு.சி.எஸ். சிந்தாமணி, வடசென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் வாயிலாக 35 நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 231 இடங்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி, மேற்கண்ட சங்கங்கள் வாயிலாக, கூடுதலாக 14 நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக கூடுதலாக 161 இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்யும் பகுதிகள் அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான காய்கறிகள் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

மேற்படி 305 நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை 2,380 டன் காய்கறிகள் ரூ.6.36 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் மட்டும் 35 நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 10.5.2020 வரை 161.56 டன். காய்கறிகள் ரூ. 38.09 லட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி இந்த நடமாடும் கடைகள் மூலம் மளிகைப் பொருட்களும் ரூ.2.05 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 677.82 டன் காய்கறிகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில், சென்னையில் செயல்பட்டு வரும் 29 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 171.90 டன் காய்கறிகள் ரூ.48.42 லட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆகமொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம், 3,059 டன் காய்கறிகள் ரூ. 8.36 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் ஆணையின்படி, பொதுமக்களின் தேவையினை பூர்த்திசெய்யும் விதமாக, 19 மளிகைப்பொருட்கள் அடங்கிய ரூ.500 – மதிப்பிலான 10 லட்சம் மளிகைத் தொகுப்பு பைகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 10.5.2020 வரை 2,45,854 மளிகை தொகுப்புகள் ரூ.12.29 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .
தேவைப்பட்டால் ரேஷன் கடைகளிலும் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.