டில்லி:

விபத்து இழப்பீடு வழக்கில் முதியவர் சக்கர நாற்காலியில் வந்து உச்சநீதிமன்றத்தி நேரில் ஆஜரான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.þ

இது குறித்து உச்சநீதிமன்ற வக்கீல் நமீத் சக்சேனா என்பவர் லைவ் லா.இன் இணையளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்….

நான் உச்சநீதிமன்ற அறை எண் 10ல் ஒரு வழக்கு தொடர்பாக மூத்த வக்கீல் ஒருவருடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன். அப்போது வழக்கு வரிசை எண் 13 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் வக்கீல் பிரேம் குமார் ஆஜராகி, ‘கடந்த வாய்தாவின் போது நீதிமன்ற உத்தரவிட்டதால் பாதிக்கப்பட்ட மனுதாரர் நேரில் ஆஜராக வந்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

எனது கவனம் அந்த வழக்கின் விசாரணையின் பக்கம் திரும்பியது. மனுதாரர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவருக்கு 60 வயது இருக்கும். உடன் அவர் மகன் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்திருந்தார். அந்த மனுதாரம் முழு மாற்றுத் திறனாளியா? அல்லது பகுதி மாற்றுத்திறனாளியா? என்பது எனக்கு தெரியவில்லை.

அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, மனுதாரரை சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நடந்து வருமாறு கூறினார். இழப்பீடு பெற அவரது ஊனம் குறித்து தனிப்பட்ட முறையில் பரிசோதனை செய்வதற்காக நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அது குறித்து கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை.

மனுதாரர் மகனின் உதவியுடன் நாற்காலியில் இருந்து எழுந்து நிற்க முயற்சி செய்தார். பின்னர் மகன் தோளில் கை போட்டுக் கொண்டு தாங்கி தாங்கி நடந்து வந்தார். அவரால் சுயமாக நடக்க முடியவில்லை. இப்படியே நடந்து நீதிமன்ற மைய பகுதிக்கு வந்து நின்றார். இதன் பின்னர் நீதிபதி மிஸ்ரா தனது உத்தரவை பிறப்பித்தார். இதை தொடர்ந்து மனுதாரர் தனது மகன் உதவியுடன் மீண்டும் சக்கர நாற்காலியில் சென்று உட்கார்ந்து கொண்டார்.

இச்சம்பவத்தை பார்த்து அங்கு கூடியிருந்த பல வக்கீல்கள் முணுமுணுக்க தொடங்கினர். ஆனால் யாரும் எதிர்த்து கருத்து தெரிவிக்கவில்லை. நான் அந்த மனுதாரரை டி நுழைவு வாயில் பகுதியில் எனது நண்பருடன் சந்தித்தேன். விபத்து இழப்பீடு வழக்கிற்காக வந்ததாக தெரிவித்தார். அவருக்கு பார்வை குறைபாடும் உள்ளது. 10 விநாடிகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அவர் இந்தூரில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்கும் என்று ஆறுதல் கூறினேன்.

அவர் ஏன் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார்? என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. காயங்கள் டாக்டர்கள் அல்லது மருத்துவ அறிக்கைகள் மூலம் நிரூபிக்கலாம். நீதிபதிகளின் தனிப்பட்ட திருப்திக்கு மாற்று ஏற்பாடு வழிமுறைகளும் உள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், நீதிமன்ற அறைகளில் மேராக்கள் அல்லத நேரலை வீடியோ வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சில சமயங்களில் நீதிமன்றங்கள் குரல் கொடுத்துள்ளன. மனுதாரர்களை கையாள வீடியோ கான்பரன்ஸ் முறை வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மனுதாரர் இந்தூரில் உள்ள வீட்டில் இருந்து ரெயில்நிலையம் வந்து, பின்னர் ரெயிலில் ஏறி பயணம் செய்து டில்லி வந்து, இங்கு ஓட்டல் அல்லது உறவினர் வீட்டில் தங்கி, பின்னர் உச்சநீதிமன்றம் வந்து சேர்ந்து, இங்கு அனுமதி சீட்டு பெற்று முதல் தளத்தில் உள்ள நீதிமன்ற அறைக்கு வந்துள்ளார்.

இங்கு சக்கர நாற்காலியை ஏற்றி வரும் வகையில் சாய்வு தளம் கிடையாது. சக்கர நாற்காலியில் வந்த முதியவர் படிகளில் தான் ஏறி வர வேண்டும். மனுதாரரான அந்த முதியவர் எப்படி சிரமப்பட்டிருப்பார். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான கட்டடங்களை கட்ட தவறிய மத்திய அரசை உச்சநீதிமன்றம் சமீபத்தில் கண்டித்திருந்தது.

அதோடு மாநிலங்கள் மாற்றுத் திறனாளிகள் சார்ந்த சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலேயே மாற்றுத் திறனாளி ஒருவர் அலைகழிக்கப்பட்ட சம்பவம் சட்ட நிபுணர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.