வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயகக் கட்சி  துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்த தகவல்கள் இதோ

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட ஜோ பிடன், கமலா ஹாரிஸ் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் இருந்தனர். இவர்களில் கமலா ஹாரிஸ் நிதிச் சிக்கல் காரணமாகப் போட்டியில் இருந்து விலகவே  ஜோ பிடன் அதிபர் வேட்பாளராக உள்ளார்.  இன்று ஜோ பிடன் தனது டிவிட்டரில் தாம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவார் என அறிவித்துள்ளார்.

தாய் வழி சொந்தங்களுடன் கமலா

கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனால் அவர் முதல் கருப்பு துணை அதிபர் மற்றும் முதல் ஆசியன் அமெரிக்கன் துணை அதிபர் எனவும் புகழ் பெறுவார்.   கமலா ஹாரிஸ் என்னும் இந்த இந்திய வம்சாவளிப் பெண்மணி தமிழ்ப் பெண் ஆவார்.  இவர் சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

கடந்த 1964 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் ஓக்லாந்து நகரில் கமலா ஹாரிஸ்  பிறந்தார். இவர் ஹோவார்ட் பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஹாஸ்டிங்ஸ் சட்டக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றுள்ளார். இவர் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கி உள்ளார்.

கணவருடன் கமலா ஹாரிஸ்

இவர் கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா அட்டர்னி ஜனரலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த செனட்டர் தேர்தலில் வெற்றி பெற்று கலிஃபோர்னியாவின் மூன்றாம் பெண் செனட்டர் என்னும் பெருமையைப் பெற்றார்.  இவர் 2020 ஆம் வருட அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முயன்று நிதிப்பற்றாக்குறை காரணமாகத் தாமாகவே வெளியேறினார்.

 

கமலா ஹாரிஸ் பெற்றோர்

கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன் அமெரிக்காவில் ஒரு பிரபல மார்பகப் புற்று நோய் நிபுணர் ஆவார்.  இவர் சென்னையில் கடந்த 1938 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார்.  சியாமளாவின் தாய் ராஜம் மற்றும் தந்தை பி வி கோபாலன் ஆவார்கள். பி வி கோபாலன் இந்திய அரசின் துணை செயலராகப் பதவி வகித்தவர் ஆவார்.

சியாமளா கோபாலன் தனது 19 ஆம் வயதில் டில்லி லேடி இர்வின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார்.   அதன்பிறகு அவர் 1960 ஆம் வருடம் அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்

கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் கட்னத 1961 ஆம் வருடம் பிரிட்டிஷ் ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணி புரிந்தவர் ஆவார்.   கமலா ஹாரிஸின் சகோதரி மாயா ஹாரிஸ் ஆவார்.  இருவரும் தேவாலயம் மற்றும் கோவில் ஆகிய இரு  இடங்களுக்கும்  செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள்.   இருவரும் தங்கள் விடுமுறையின் போது சென்னைக்கு வருவார்கள்.

 கமலா ஹாரிஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு டக்ளஸ் எமாஃப் என்பவரை திருமணம் செய்துள்ளார்