சென்னை: வழக்கறிஞர் காரில் கத்தை கத்தையாக செல்லாத நோட்டு!

சென்னை,

சென்னையில் ஐகோர்ட்டு வழக்கறிஞர் காரில் இருந்து கத்தை கத்தையாக செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு  ரூ.2 கோடி என தெரியவந்துள்ளது.

சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருப்பவர் சாலை சிவக்குமாரர். இவரது காரில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்தியஅரசு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதும்,  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பழைய நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மாற்றி கொள்ள காலக்கெடுவும் வழங்கப்பட்டி ருந்தது.  ஆனாலும், தொடர்ந்து வங்கி அதிகாரிகளின் துணையுடன் பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ஐகோர்ட்டு வழக்கறிஞர் 2 கோடி ரூபாய் மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவலையறிந்த வருமான வரித்துறையினர், போலீசார் உதவியுடன் அவரை மடக்கி காரை சோதனை செய்தனர்.

அப்போது காரினுள் இருந்த  2 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் கத்தை கதையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணைக்காக சாலை சிவக்குமாரை சூளைமேடு போலீசாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

ஐகோர்ட்டு வழக்கறிஞர் ஒருவரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.