காரைக்குடி

நோய்வாய்ப்பட்ட தாயை சில ரொட்டித்துண்டுகளை ஒரு பாட்டில் குடிநீருடன் வைத்து விட்டு மகன் வெளியூர் சென்றுள்ளார்

காரைக்குடியில் பிரபு நகர் பதியின் வசிப்பவர் ராஜேந்திரன்.   இவருடைய தாயாருக்கு வயது 80.   அவர் சில காலங்களாக நோய்வாய்ப்பட்டுள்ளார்.   ஒரு வாரம் முன்பு அவர் தனது தாயை விட்டுவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.   வீட்டையும் வாசல் கேட்டையும் பூட்டிய அவர் தனது தாயை போர்ட்டிகோவில் ஒரு கட்டிலில் போட்டுவிட்டு பக்கத்தில் சில ரொட்டித் துண்டுகளையும் ஒரு பாட்டிலில் தண்ணீரையும் வைத்து விட்டு சென்றுள்ளார்.

தற்செயலாக ராஜேந்திரன் வீட்டில் அவர் தாயார் அசையாமல் படுத்திருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர் இறந்ததாகக் கருதி காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.   தீயணைப்புத் துறை உதவியுடன் அவரை மீட்ட காவல் துறையினர் தற்போது அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.    அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரை ஐ சி யூ வில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

காவல்துறையினரால் இது வரை ராஜேந்திரனை தொடர்பு கொள்ள இயலவில்லை என தெரிய வருகிறது.    முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்த ராஜேந்திரனின் அடுத்த வீட்டுக்காரர்  முன்பு ராஜேந்திரன் வெளியூர் போகும் போது தங்களிடம் தாயாருக்கு உணவளிக்குமாறு சொல்வார் எனவும் இம்முறை அவர் ஊருக்கு போவதையே சொல்லாமல் சென்று விட்டதாகவும் கூறி உள்ளார்.