டில்லி

காத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவு பெருகி வருவது குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஒரு பகுதியில் பேசுகையில் காந்தியைக் கொன்ற கோட்சே இந்தியாவின் முதல் தீவிரவாதி எனவும் அவர் ஒரு இந்து எனவும் தெரிவித்தார். இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமலஹாசன் தனது கட்சிக்கு வாக்கு கிடைக்க மதப் பிரச்னையை தூண்டுவதாக சில இஸ்லாமியர்களும் தெரிவித்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்ஞா தாகுர், “கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இனியும் இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என அழைப்பவர்களுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என கூறினார். அதை தொடர்ந்து மேலும் இரு பாஜக தலைவர்கள் கோட்சேவை புகழ்ந்தனர்.

தேர்தல் நேரத்தில் இது போன்ற கருத்துக்கள் பாஜகவை பாதிக்கும் என பலரும் தெரிவித்தனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்த கருத்துக்காக மூவர் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்தார். மூவரும் தங்கள் கருத்துக்கு மன்னிப்பு கோரினர். ஆயினும் இந்த சர்ச்சை தொடர்ந்தபடி உள்ளது.

இது குறித்து பிரபல தொழிலதிபரும் மகிந்திரா அண்ட் மகிந்திரா குழும உரிமையாளருமான ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்தியா கடந்த 75 ஆண்டுகளாக மகாத்மாவின் பூமியாக இருந்து வருகிறது. இந்த உலகம் தன் மாண்பை இழந்து தவித்தபோது, அதற்கு ஒளி விளக்காக இருந்தவர் மகாத்மா காந்தி.

நம் மீது பலர் நாம் ஏழைகளாக இருந்ததால் இரக்கப்பட்டனர். அதே நேரத்தில் பல கோடி பேருக்கு மகாத்மா முன்னுதரணமாக இருந்ததால், நாம் செல்வந்தர்களாகவே உணர்ந்தோம். ஒரு சில விஷயங்கள் புனிதமாகவே நீடிக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் தாலிபான் போல மாறி, சிலைகளை உடைத்தெறியலாம்” என பதிந்துள்ளார்.