புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது மட்டுமின்றி, வேறுவகையான மருத்துவ பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா.
அவர் தெரிவித்துள்ளதாவது, “ஆட்சியாளர்களுக்கு என்ன முடிவு எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்றாலும், ஊரடங்கு என்பது உதவிகரமாக இருக்காது. நான் இதற்குமுன் தெரிவித்திருந்ததை போல், ஊரடங்கு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, வேறுவிதமான மருத்துவ பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நாம் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஊரடங்கு நடவடிக்கைகளால் பொருளாதார இழப்பை மட்டும் நாம் சந்திக்கவில்லை.
கொரோனா தவிர, வேறு நோய்களுக்கான சிகிச்சை கிடைப்பதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது இந்த முடக்கம். ஊரடங்கை நீட்டிப்பதில் எவ்விதமான லாபமும் இல்லை” என்றுள்ளார் ஆனந்த் மகிந்திரா.
முதல் கட்ட ஊரடங்கு மோடி அரசால் அமலாக்கப்படுவதற்கு முன்னதாகவே, இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் நிகழ்ந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்!