காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் விமான முறைகேடுக்கு நீதி விசாரணை….ஆனந்த் சர்மா

டில்லி:

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 32 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்த்தை மத்திய பாஜக அரசு மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஒரு ரபேல் போர் விமானம் ரூ.520 கோடி கொடுத்து விமானத்தை வாங்க காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக ரூ.1,600 கோடி கொடுத்து விமானத்தை வாங்க பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை எனில் நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த அரசு அஞ்சுவது ஏன்?. இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல். இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்றால், அடுத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீதி விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.