பெங்களூரு

பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வரானது குறித்து வாட்ஸ்அப் மூலம் பரவும் போலித் தகவலை அக்கட்சி தலைவர் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

பாஜக – சிவனா கட்சி கூட்டணியை முதல்வர் பங்கீடு சர்ச்சை காரணமாக சிவசேனா கட்சி முறித்துக் கொண்டது.   அதன் பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில் திடீரென பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர் பதவி ஏற்றார்.   அவரால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் வாக்கெடுப்பு நடத்தாமலே பதவி விலகினார்.

இது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான அனந்த குமார் ஹெக்டே, “நமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் வெறும் 80 மணி நேரம் மகாராஷ்டிர முதல்வர் பதவி வகித்ததை நாம் அறிவோம்.  அதன்  பிறகு அவர் ராஜினாமா செய்தார்?  அவர் ஏன் இவ்வாறு நாடகம் நடத்தினார் தெரியுமா? நமக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை அவர் அறிந்தும் முதல்வரானது ஏன் எனப் பலரும் கேள்விகள் கேட்கின்றனர்.

முதல்வர்  தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அரசிடம்  இருந்து ரூ.40000 கோடி நிதியை வாங்கி வைத்திருந்தார்.   அவருக்கு சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தால் இதை தாறுமாறாகச் செலவழித்து விடுவார்கள் என்பது நன்கு தெரியும்.   அதனால் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர்  பதவியை ஏற்றுக் கொண்டு 15 மணி நேரத்தில் அந்த ரூ.40000 கோடியை மத்திய அரசுக்கு அந்த நிதியைத் திருப்பி செலுத்தி விட்டார்” என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி ஏற்கனவே வாட்ஸ்அப் மூலம் பலராலும் பகிரப்பட்டு வந்த போலிச் செய்தியாகும்.  அனந்த ஹெக்டேவின் தகவல் டிவிட்டரில் வெளியாகி பொய்த் தகவல் அளித்ததற்காக அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  இந்நிலையில் இது குறித்து பாஜக, “மகாராஷ்டிர முதல்வர் குறித்து அனந்தகுமார் ஹெக்டே வெளியிட்டுள்ள தகவல் வாட்ஸ்அப் மூலமாக அவருக்கு வந்துள்ள போலிச் செய்தியாகும்.   இதைத் தெரியாமல் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்து உள்ளார்” என விளக்கம் அளித்துள்ளது.