தற்கொலைக் கடிதம் அஷோக் குமார் எழுதியது தானா? : அன்பு செழியன் கேள்வி

--
அஷோக் குமார்                                                            அன்பு செழியன்

சென்னை

ஷோக் குமார் எழுதியதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதம் உண்மையாகவே அவர் எழுதியது தானா என அன்பு செழியன் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினரும் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியருமான அஷோக் குமார் நேற்று தற்கொலை செய்துக் கொண்டார்.   அவர் தனது தற்கொலைக் கடிதத்தில்  கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன் தங்கள் நிறுவனத்துக்கு கொடுத்த கடனைக் கேட்டு மிகவும் தொந்தரவு செய்ததாகவும்,  சமீபத்தில் வெளிவர வேண்டிய கொடி வீரன் படத்தை நிறுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டதாக எழுதி இருந்தார்.

ஆனால் அன்புச்செழியனின் நிறுவனமான கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  அதில், “எங்கள் நிறுவனத்துக்கும் மறைந்த அஷோக் குமாருக்கும் இடையில் எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது.  அப்படி இருக்க அவர் எதற்கு எங்கள் பெயரை கூறினார் எனத் தெரியவில்லை.    மேலும் எந்த சம்மந்தமும் இல்லாத எங்கள் பெயரை குறிப்பிட்டுள்ளதால் அந்தக் கடிதம் அவர் எழுதியது தானா என சந்தேகம் உள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “நாங்கள் இந்த திரைப்படத் துறையில் 20 வருடங்களாக இருந்து வருகிறோம்.  எங்கள் மேல் இதுவரை எந்தப் புகாரும் இல்லை.   எந்த ஒரு முதலீடும் இல்லாமல் படம் தயாரிக்க பலர் வருகின்றனர்.   அவர்கள் எங்களிடம் எந்த ஒரு பொருளையோ சொத்தையோ அடகு வைக்காமல் பணம் வாங்குகிறார்கள்.   படம் முடிந்து வெளியாவதற்குள் தர வேண்டும் என்பதே நிபந்தனை.   ஆனால் இவர்கள் வாங்கிய பணத்தை தாராளமாக செலவு செய்து விடுகின்றனர்.    ஒரு கும்பலே இது போல கிளம்பி எங்களை ஏமாற்ற எண்ணியுள்ளது என கருதுகிறோம்”  என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது