சென்னை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தன் அறிக்கையில் அரசின் ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களை பழிவாங்கத் துடிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பா ம க இளைஞர் அணி தலவர் அன்புமணி தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது “

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி(Group1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய ஊடகத்தை பழிவாங்கும் செயலில் டி.என்.பி.எஸ்.சி. அமைப்பும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் ஒருசில ஊடகங்களையும் அச்சுறுத்தி ஒடுக்க ஆட்சியாளர்கள் முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 19 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 21 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்டப் பதிவாளர்கள் என 74 முதல் தொகுதி பதவிகளுக்கான முதனிலைத் தேர்வுகள் 2015ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டன. அத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இத்தேர்வுமிகவும் நேர்மையாக நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை.

ஆனால், தேர்வாணையத் தலைவர் அருள்மொழி விடுப்பில் சென்றிருந்த நிலையில் மே 12ஆம் தேதி முதல் தொகுதி தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டன. டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதிப் பணிக்கான முதன்மைத் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. விடைத்தாள்கள் மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் சத்தியம் தொலைக்காட்சி ஒரு செய்தித் தொகுப்பை தயாரித்து வெளியிட்டது. அதில் மாற்றப்பட்டதாக கூறப்படும் விடைத்தாளும் காட்டப்பட்டது.

இதை ஆதாரமாகக் காட்டி இப்போட்டித் தேர்வில் பங்கேற்று பாதிக்கப்பட்ட ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இதுவரை அனைத்தும் சரியாக நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடரப்படுவதற்கு காரணமான சத்தியம் தொலைக்காட்சியை பழி வாங்கும் முயற்சிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டிருக்கிறது. இச்சிக்கல் தொடர்பாக சத்தியம் தொலைக்காட்சி மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் தேர்வாணையம் புகார் செய்திருக்கிறது. அதனடிப்படையில் விசாரணை என்ற பெயரில் சத்தியம் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவினருக்கு தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது.

உண்மையில் முதல் தொகுதிப் பணிக்கான முதன்மைத் தேர்வின் விடைத்தாள் கிடைத்ததுமே அதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி மற்றும் காவல்துறைக்கு சத்தியம் தொலைக்காட்சி தகவல் அளித்துள்ளது. அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்காத இரு அமைப்புகளும் இப்போது சத்தியம் தொலைக்காட்சியை பழிவாங்கத் துடிப்பது முறையானதல்ல. டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதிப் பணிக்கான முதன்மைத் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தது உண்மை. இதுபற்றி பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இரு முறை அறிக்கை வெளியிட்டார். பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கும் நிலையில் அது குறித்து விசாரணைக்கு ஆணையிட்டு தவறு செய்தவர்களை தண்டிப்பது, தவறு செய்யாவிட்டால் அதை நிரூபிப்பது ஆகியவை தான் டி.என்.பி.எஸ்.சி. முன் உள்ள இரு வாய்ப்புகள் ஆகும்.

ஆனால், அதை செய்யாமல் ஆதாரத்தை வெளியிட்டவர்களை பழிவாங்கத் துடிப்பது டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தவறு நடந்திருப்பதையேக் காட்டுகிறது. டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதிப் பணிக்கான முதன்மைத் தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவசரம் அவசரமாக நேர்காணல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் நிறுவனம் இத்தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 65 பேர் தங்கள் மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று விளம்பரம் செய்து வருகிறது. அதனுடன் தொடர்புடைய இன்னொரு நிறுவனம் வெற்றி பெற்ற 74 பேரில் 62 பேர் தங்களிடம் படித்தவர்கள் என்று விளம்பரம் செய்கிறது. இரண்டில் எது சொல்வது உண்மை என்பதும், இருவருமே மோசடிக்காரர்களா என்பதும் ஒருபுறமிருக்க போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 85 முதல் 90 விழுக்காட்டினர் எவ்வாறு ஒரே நிறுவனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட முடியும்?

இதிலிருந்தே டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடப்பது உறுதியாவில்லையா? ஊடகங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சிகளாக விளங்க வேண்டும். ஆனால், ஒருசில ஊடகங்கள் தான் ஊழலை துணிச்சலாக வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றையும் மிரட்டிப் பணிய வைக்க ஆட்சியாளர்கள் முயல்வது கண்டிக்கத்தக்கது. இத்தகைய மிரட்டலைக் கைவிட்டு டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இந்த விஷயத்தில் துணிச்சலாக செயல்படும் ஊடகங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி துணை நிற்கும்.

இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.