சென்னை,

“தீபாவளிக்கு ரூ.500 கோடி இலக்கை எட்டுவதற்காக  விதிகளை மீறி மது விற்பனை நடந்திருக்கிறது” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகள், தார்மீக நெறிகள், அறம் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, பணம் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசின் கொள்கை போலிருக்கிறது. அதனால் தான், அதிக வருவாய் ஈட்ட விதிகளை புதைத்து விட்டு கண்மூடித்தனமாக மது விற்பனை செய்திருக்கிறது.

தீப ஒளி திருநாளையொட்டி ஆலயங்களில் வழிபாடு நடத்துவதற்காகவும், ஆதரவற்றோர் இல்லங்களில்  உதவிகளை வழங்குவதற்காகவும், நண்பர்களின் வீடுகளில் கொண்டாட்டங்களுக்காகவும் கூட்டம் கூடுவது இயல்பானது தான். ஆனால், தீபஒளி திருநாளான நேற்று தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் நீக்கமற நிறைந்திருந்த காட்சி என்னவெனில், மது வாங்குவதற்காக மதுக்கடைகள் முன் காலை முதலே குவிந்திருந்த கூட்டம் தான். அவர்களில் பெரும்பான்மையினர் 30 வயதுக்குட்பட்ட  இளைஞர்கள் என்பது தான் கொடுமை ஆகும். மது குடிப்பதற்கு துடித்தவர்களைப் போலவே, மது விற்பனையாளர்களும் துடித்ததாலோ என்னவோ காலை 11.00 மணிக்கே மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடியதுடன், காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டு வந்த மதுக் கடைகள் இனி நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை அரசே மதிக்காமல் முன்கூட்டியே மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கப்பட  வேண்டியதாகும்.  தீப ஒளி திருநாளையொட்டி ரூ.700 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்த டாஸ்மாக் நிறுவனம், குறைந்தது ரூ.500 கோடிக்காவது மதுவை விற்று விட வேண்டும் என்று மேற்பார்வையாளர்களுக்கு ஆணையிட்டிருந்ததாகவும், அந்த இலக்கை எட்டுவதற்காகவே மதுக்கடைகள் முன்கூட்டி திறக்கப்பட்டதாகவும்  அரசு மதுக்கடைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கக்கூடியவை நியாயவிலைக் கடைகள். மக்களின் நலன் கருதி இவை ஒரு நாள் கூட முன்கூட்டியே திறக்கப்பட்டதில்லை… சரியான நேரத்திற்குக் கூட திறக்கப்பட்டதில்லை. ஆனால், மதுக்கடைகள் மட்டும் தீபஒளித் திருநாளையொட்டி திறக்கப்படுகிறது என்றால் தமிழக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதிக வருவாய் ஈட்ட வேண்டும்… அதற்காக அதிக மதுவை விற்க வேண்டும் என்பதற்காக மதுக்கடைகளை முன்கூட்டியே திறப்பதை விட பெரிய அவலம் எதுவுமில்லை. தமிழக ஆட்சியாளர்கள் யார்? என்பதை அவர்களின் செயல்களே நிரூபிக்கின்றன. இத்தகைய நடத்தைகளுக்காக  ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தீபஒளி திருநாளுக்காக இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்பட்டதால் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மதுக்கடைகளிலும், குடிப்பகங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பல இடங்களில் குடிகாரர்கள் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்தினார்கள். இதனால் அப்பகுதிகளில் பெண்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல்கள்,  சாலை விபத்துக்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அரசும், காவல்துறையும் மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

மதுவை விற்று அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் அரசு நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்கத்தக்கதல்ல. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்த ஆட்சியாளர்கள் அதை செயல்படுத்துவதற்கு பதிலாக மதுவகைகளின் விலையை உயர்த்தியும், மதுக்கடைகளை முன்கூட்டியே திறந்தும் அதிக வருவாய் ஈட்டத் துடிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

எனவே, தமிழகத்தில் தீப ஒளி திருநாளையொட்டி மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டு, மது வணிகம் செய்யப்பட்டது பற்றி விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தை அழித்து வரும் மது அரக்கனை ஒழிப்பதற்காக தமிழகத்தில் புத்தாண்டு முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு தனது அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.