பொலி வசிப்பிட சான்றிதழ் மூலம் ஜிப்மரில் 30 இடங்களை பிடித்த ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள்!

புதுச்சேரி: புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அங்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த  சுமார் 30 மாணவர்கள் போலி வசிப்பிட சான்றிதழ் மூலம் இடம்பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் நாராயணசாமி உததரவிட்டு  உள்ளார்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்பில் புதுச்சேரியில் 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. முன்பு ஜிப்மர் கல்லூரியால் தனி நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கை நடந்து வந்தது. இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மத்திய மருத்துவக் கலந்தாலோசனைக் குழு சேர்க்கையை நடத்த உள்ளது. இதனால் புதுச்சேரிக்கான இட ஒதுக்கீட்டு இடங்கள் 54-ம் மாணவர்களுக்குக் கிடைக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ஆனால், ஜிப்மர் நிறுவன சட்டதிட்டப்படி அனைத்து இட ஒதுக்கீடு, புதுச்சேரி இருப்பிடத் தகுதிக்கான வாய்ப்புகள் தரப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஜிப்மர் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பதிலாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் வசித்து வருவதாகப் போலியான சான்றிதழைக் கொடுத்த,  புதுச்சேரி மாநிலத்துக்கு உரிய இட ஒதுக்கீட்டின் படி மருத்துவப் படிப்புக்கான இடத்தை கைப்பற்றி இருப்பதாகவும்   குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி  இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்பாக ஜிப்மர் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, அவரிடம், மருத்துவக் கல்லூரி இடங்கள் முழுமையாகப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்கப் பட வேண்டும். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போலி சான்றிதழ் கொண்டு வந்தால் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி இருக்கிறேன்.  அவரும் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து திருப்தியாக இருந்தால், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால் புதுச்சேரி மாநிலத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படும். இல்லை என்றால் கண்டிப்பாக அது மறுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இது சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். மாவட்ட கலெக்டரும் விசாரணை செய்து ஒரு முடிவு எடுப்பார்.

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்த வரையில் இம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமே, தவிரப் போலி சான்றிதழ் கொடுத்து விட்டு புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக மத்திய மருத்துவ கழகத்திற்கும் நான் கடிதம் எழுதி இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஜிப்மரில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கை தொடர்பாக நிர்வாகம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறது. ஜிப்மர் எம்பிபிஎஸ் அனுமதியானது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும். அதே நேரத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு ஜிப்மர் நிறுவன சட்டதிட்டப்படி அனைத்து இட ஒதுக்கீடு, இருப்பிடத் தகுதிக்கான வாய்ப்புகளும் தரப்படும். இது புதுச்சேரி, காரைக்காலில் உள்ள இரு மையங்களுக்கும் பொருந்தும். இது தொடர்பான அனைத்து அதிகாரபூர்வத் தகவல்களும் எம்பிபிஎஸ் படிப்பு தொடர்பான பக்கத்தில் ஜிப்மர் இணையதளப் பக்கத்தில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.