கன மழையால் வெள்ளத்தில் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா

தராபாத்

டந்த 2 நாட்களாக  நிற்காமல் பெய்து வரும் கனமழையால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா  மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தவித்து வருகின்றன.

சில நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலத்தில்  உள்ள காக்கி நாடா அருகே கரை கடந்தது.  இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   மழை காரணமாக இரு மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத் நகரில் மட்டும் ஒரே நாளில் 25 செமீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இரு மாநிலங்களிலும் பல இடங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாழாகி உள்ளன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இந்த வெள்ளத்தினால் இரு மாநிலங்களிலும் இணைந்து சுமார் 20 பேர் வரை உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் இரு தினங்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.