ஐதராபாத்: சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

2004 முதல் 2009 வரை மறைந்த ராஜசேகர ரெட்டி காலகட்டத்தில் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பாக ஜெகன் மோகன் மீது 11 வழக்குகள் போடப்பட்டனது. இந்த வழக்குகளில் மே 2012 முதல் செப்டம்பர் 2013 வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். பிறகு மே 30ம் தேதி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் வழக்கு விசாரணையில் இருந்து  விலக்கு கோரி ஜெகன் மோகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 3ம் தேதி நடைபெற்ற மனு மீதான விசாரணையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினர் வி.விஜயசாய் ரெட்டியும் ஆஜரானார். அதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.