சர்ச்சை: போராட்டக்காரர்களை மிரட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி:

ந்திர முதல்வர் சந்திரபாபு  தலைமை செயலகம் அமைந்துள்ள அமராவதி செல்லும் கான்வாயின்போது, அவருக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தியவர்களை சந்தித்த நாயுடு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை செயலகம் அமைந்துள்ள அமராவதிக்கு செல்லும் கான்வாயின்போது, வழியில், கோவில்களில் பணிபுரியும்  பார்பர் ( முடி திருத்துவோர்) அமைப்பை சேர்ந்தவர்கள், முதல்வருக்கு எதிராக கோஷம் போட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா முழுவதும் உள்ள கோவில்களில் ஆயிரக்கணக்கில் பார்பர்கள் பணி செய்து வருவதாகவும், தங்களுக்கு நிரந்தரமான ஊதியம் மற்றும்ட பிஎப் வசதிகள் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகறித்து ஏற்கனவே துணைமுதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடந்த நிலையில், முடிவு எட்டப்படாத நிலையில்,  போராட்டக்குழுவினர் தலைமை செயலகம் அருகே வந்து முதல்வர் செல்லும் கான்வாயின்போது கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைக்கண்ட சந்திரபாபு நாயுடு வாகனத்தை நிறுத்தி,போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கடுமையாக சாடினார். முதலில் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் என்று போராட்டக்காரர்களிடம்  கண்டிப்புடன் கூறினார்.

மேலும், நீங்கள் மரியாதை கொடுத்தால் நானும் மரியாதை கொடுப்பேன், நீங்கள் விளையாடினால் நான் தீவிரமாவேன் என்று எச்சரித்தார். எதற்கும் ஒரு வரை முறை உள்ளது. நீங்கள் போராட்டம் என்ற பெயரில் அரசாங்கத்துக்கு ஆணையிட முடியாது என்று எச்சரித்த முதல்வர்,  நான் உங்களை மதிக்கிறேன், ஆனால் நீங்கள் செயலகத்திற்கு வருகிறீர்கள்…..   நீங்கள் விரும்பியதை செய்கிறீர்கள்…. நீங்கள் அனைவருக்கும் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்.

தலைமை செயலகம்… மக்களின் கோவிலாகும். நீ இங்கே வர வேண்டாம். கவனமாக இருங்கள் என்றும் எச்சரித்தார்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட  பார்பர் சங்க நிர்வாகி தலையிட முயன்றபோது, நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்…  நீங்கள் பேச அனுமதிக்க முடியாது,  நீங்கள் கத்தி பேசுகிறீர்கள்… இது என்ன மீன் மார்க்கெட்டா? என்றும் கண்டித்தார்.

அப்போது மற்றொருவர், முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், கிராம வருவாய் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளீர்கள்.. அதுபோல எங்களுக்கும் ஊதிய  உயர்வு கொடுங்கள்  என்று கோரினார். அவரை பாதுகாப்பு அதிகாரிகளை விட்டுச் அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், போராட்டக்கார்களை பார்த்து,  “நீங்கள் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களே…  அதை நீங்கள் செய்கிறீர்கள். நான் எதுவும் சொல்லமாட்டேன்.  நீங்கள் என்னை பயமுறுத்துகீறீர்களா? என்றும் விரல்களை சுட்டிக்காட்டி பேசினார்.

அதற்கு பதில் அளித்த போராட்டக்காரர்கள், இது அச்சுறுத்தல் இல்லை என்றும், எங்களது கோரிக்கையும் கூறினோம் என்றனர்.

அதைத்தொடர்ந்து அவரிடம் நீங்கள் எந்த கிராமத்தில் இருந்து வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய முதல்வர்,  9 ஆண்டுகளாக நான் ஆட்சி புரிந்திருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். உங்கள்  கோரிக்கையில்  நியாயம் இருந்தால், நான் உங்களைத் தேடி வருவேன் என்றும்,  ஆனால் யாராவது என்னை அச்சுறுத்த நினைத்தால், அவர்களுடைய வாலை வெட்டுவேன் என்றும் கோபமாக கூறினார்.

அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை  பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அகற்ற முற்பட்டனர். அப்போது சந்திரபாபு நாயுடு,  “அவர்களை தள்ளாதீர்கள். அவர்கள் சுதந்திரமாக வரட்டும். நான் அவர்களிடம் பேசுவேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நான் பார்ப்போம். ” என்று கூறினார்.

முதல்வரின் இந்த கோபமான பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி,  முதலமைச்சரின் நடத்தை சரி யில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.