விஜயவாடா: ஆந்திராவில் பணியாற்றும் பல்வேறு நிலைகளிலான காவலர்களுக்கு, இனிமேல் வார விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பின்படி, கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், துணை உதவி ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு வார விடுமுறை அளிக்கப்படும்.

இந்தப் புதிய நடைமுறை ஜுன் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இப்புதிய திட்டத்தின்படி, 67,804 காவல் துறையினர் பயன் ‍பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும், அது கடைசிவரை பயன்பாட்டிற்கு வரவேயில்லை. தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெகன்மோகன் ரெட்டி அளித்த வாக்குறுதிகளில் காவல்துறையினருக்கான விடுமுறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி ஷங்கர் அய்யனார் கமிட்டி அளித்தப் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.