ஐதராபாத்:

கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது.

ஆந்திரா மாநில இந்து அறக்கட்டளை துறை அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ‘‘அதில் வரும் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளுதல், சிறப்பு தரிசன ஏற்பாடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளது.

‘‘தெலுங்கு வருட பிறப்பு தினமான யுகாதி பண்டிகை அன்று மட்டும் தான் கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற வேண்டும். விளம்பர பதாகைகள் வைத்தல், அலங்காரம் போன்றவைக்கு கோவில் நிர்வாகம் பணம் செலவிடக் கூடாது’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அறகட்டளை துறை செயலாளர் சிலகபதி விஜய ராகவா கூறுகையில், ‘‘இந்து பாரம்பரியப்படி சைத்ரா மாதத்தில் தான் தெலுங்கு வருட பிறப்பான யுகாதி கொண்டாடப்படுவது வழக்கம். ஆங்கில புத்தாண்டுக்கு கோவில் நிர்வாகங்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக புகார் வந்தது. இந்து கலாச்சாரத்தில் இல்லாத வகையில் இந்த புத்தாண்டுக்கு செலவு செய்வதை ஏற்க முடியாது. அதனால் இந்த நடைமுறையை நேர்மையாக பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஆங்கிலேயர்களின் கலாச்சாரம் இன்னும் சில கோவில்களின் பின்பற்றப்படுகிறது. சில பக்தர்கள் இதை விரும்புவதால் லட்சகணக்கான ரூபாய் அலங்கார பணிகளுக்கு செலவிடப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

வழக்கமாக புத்தாண்டு அன்று கோவில்களில் சிறப்பு தரிசனமும், அலங்காரமும் மேற்கொள்ளப்படும். புத்தாண்டை வரவேற்கும் விதமாக இது கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி யுகாதி கொண்டாடப்படுகிறது.

தெலுங்கு காலண்டர் படி இந்த திருவிழா தான் புத்தாண்டு விழாவாக கருதப்படுகிறது. இந்த விழா ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.