ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி… ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்

அமராவதி:
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு  தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தின்படி சுமார் 2லட்சத்து 60ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் ஆட்சி செய்துவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு (2019) அக்டோபர் 4ம் தேதி  ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மீட்கும் வகையில்,  ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் வழங்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர். வாகனா மித்ரா திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம் தடேப்பள்ளியில்  நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி கலந்துகொண்டு , பயனாளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.
அப்போது பேசிய முதல்வர் ரெட்டி, கொரோனாவால் வருவாய் இழந்துள்ளோருக்காக, இந்த ஊக்கத் தொகை, 4 மாதங்களுக்கு முன்னதாகவே வழங்கப்படுகிறது. இதை, வாகன உரிமம் புதுப்பிப்பு, காப்பீடு உள்ளிட்டவற்றின் செலவுகளுக்கு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மதுவுக்கு பயன்படுத்தக்கடாது,  அவ்வாறு செய்தால், அது ஓட்டுனருக்கு மட்டுமின்றி பயணியரையும் பாதிக்கும்.
இத்திட்டத்தில் சேராதவர், இணைவதற்கான தகுதிகள் குறித்து, உள்ளுர் நிர்வாகத்திடம் கேட்டறியலாம். தகுதி இருப்பின், விண்ணப்பித்து இணையலாம்.
இவ்வாறு கூறினார்.

ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ .262.49 கோடியை 2,62,493 பயனாளிகளுக்கு வழங்குவதாக முதல்வர்  ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.