நிதி ஒதுக்கீட்டில் 90% செலவீடு…..ஆவணங்களை வெளியிட்டு அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி

ஐதராபாத்:

மத்திய அரசு 7 மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த ரூ.1,050 கோடியில் 90 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளது என்று ஆவணங்களை வெளியிட்டு அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார்.

‘‘ஆந்திராவில் உள்ள 7 பின்தங்கிய மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 1,050 கோடியில் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்று அமித்ஷா குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு நிதி ஆயோக் ஆலோசகர் அசோக் ஜெயினுக்கு மாநில தலைமைச் செயலாளர் தினேஷ் குமார் எழுதிய கடிதத்ததை இன்று வெளியிட்டார். இக்கடிதம் கடந்த ஜனவரி 31ம் தேதி எழுதப்பட்டுள்ளது.

அதில்,‘‘ மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடியில் 946.47 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான பயன்பாட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 4 தவணைகளில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2017&18ம் ஆண்டுக்கான அடுத்தக்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்தால் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க உதவியாக இருக்கும்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தெலுங்கு தேச எம்பி ராம் மோகன் நாயுடு கூறுகையில், ‘‘பாஜக.வின் பொய் பிரச்சாரத்துக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது பழி சுமத்தி ஆந்திரா மக்களின் கோரிக்கையை சிறுமைப்படுத்த அமித்ஷா முயற்சித்துள்ளார். ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1,050 கோடியில் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால், இதில் 946.47 கோடி செலவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விழியநகரம், விசாகப்பட்டிணம், சித்தூர், கடப்பால குர்நூல், அனந்த்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014 முதல் 2017ம் ஆண்டு வரை ஒரு மாவட்டத்துக்கு தலா ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீகாகுளத்தில் 3 ஆண்டுகளில் 135.15 கோடி, விழிநகரத்தில் ரூ.134.74 கோடி, விசாகப்பட்டிணத்தில் ரூ.135.46 கோடி, சித்தூரில் ரூ.134.90 கோடி, கடப்பாவில் 137.08 கோடி, அனந்த்பூரில் ரூ.124.59 கோடி, குர்நூலில் ரூ.144.55 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31ம் தேதி வரை ரூ.103.53 கோடி மட்டுமே மிச்சம் உள்ளது.

‘‘இந்த நிதியின் கீழ் திட்டமிடப்பட்ட பெரும்பாலான பணிகள் 7 மாவட்டத்திலும் முடிக்கப்பட்டுள்ளது. சில பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2017&18ம் ஆண்டிற்கு இந்த திட்டத்தின் கீழான நிதியின் வருகையை மாநில அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது’’ என்று மாநில திட்டத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.