ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

விஜயவாடா

ற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதைத் தாண்டிய இணை நோய் உள்ளோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.  மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.  அப்போது ஆந்திர முதல்வரிடம் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்து உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த தடுப்பூசிகள் இன்னும் இரு தினங்களுக்கு மட்டுமே போதுமானது என அதிகாரிகள் முதல்வருக்குத் தெரிவித்துள்ளனர்.  இதையொட்டி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக மத்திய அரசுக்கு விவரங்களை வழங்கி தேவையான கொரோனா தடுப்பூசி மருந்தை மத்திய அர்சிடம் இருந்து வாங்கி வைக்க உத்தரவிட்டுள்ளார்.