வர்த்தகம் நடத்த உகந்த மாநிலம் : ஆந்திராவுக்கு முதல் இடம்

டில்லி

ந்தியாவில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலங்கள் வரிசையில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி எஸ் டி அமுலாக்கத்துக்குப் பின் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் அனைத்து மாநிலங்களும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.   இது குறித்து இந்திய பொருளாதார வல்லுனர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.     தற்போது இந்திய மாநிலங்களின் வர்த்தகம் குறித்து உலக வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வின் முடிவில், “இந்திய மாநிலங்களில் வர்த்தகம் நடத்த மிகவும் உகந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது.   அதைத் தொடர்ந்து  தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.   அம்மாநிலங்களுக்கு அடுத்த படியாக ஜார்கண்ட் (4), குஜராத் (5), சத்தீஸ்கர் (6),  மத்தியப்பிரதேசம் (7), கர்நாடகா (8), ராஜஸ்தான் (9) மற்றும் மேற்கு வங்கம் (10) ஆகிய இடங்களில் உள்ளன.

மேலே உள்ள 10 மாநிலங்களும் 95% க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளன.  அதற்கு அடுத்தபடியாக 90% முதல் 95% வரை ஐந்து மாநிலங்கள் உள்ளன.   அவைகளில் தமிழ்நாடு 90.68% மதிப்பெண் பெற்று 15ஆம் இடத்தில் உள்ளது.

இந்த வரிசையில் வெறும் 0% மதிப்பெண் பெற்று கடைசி இடங்களில் அருணாசலப் பிரதேசம், லட்சத்தீவு,மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் உள்ளன.  தலைநகர் டில்லி\ 31.6% மதிப்பெண் பெற்று 23ஆம் இடத்தில் உள்ளது. ” என அறிவிக்கப்பட்டுள்ளது.