சூரத்தில் இறந்து கிடந்த சிறுமியின் தந்தை நானே :  ஆந்திர ஆசாமி 

சூரத்

சூரத் நகரில் கிடைத்த சிறுமியின் சடலம் தன்னுடைய மகள் என ஆந்திராவை சேர்ந்த ஒருவர் கூறியதை தொடர்ந்து மரபணு சோதனை நடைபெற உள்ளது.

இந்த மாதம் 6ஆம் தேதி அன்று சூரத் நகரில் சுமார் 8 முதல் 11 வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியின் சடலம் அந்நகரின் பந்தேசரா பகுதியில் கிடைத்தது.   மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.     அந்த சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளிலும் காயங்கள் இருந்தன.   மருத்துவர்கள் அந்த சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் நிகழ்த்தியதால் இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

அந்த சிறுமி சூரத் நகரை சேர்ந்தவராக இருக்க மாட்டார் எனவும் வேறு எங்கோ கொலை செய்து விசாரணையை திசை திருப்ப சூரத் நகரில் கொண்டு வந்து உடலை போட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதினர்.   அதை ஒட்டி விசாரணையை நிகழ்த்தி உள்ளனர்.    ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் அந்த சிறுமியின் சடலத்தின் புகைப்படத்தைக் கண்டுள்ளார்.   அது காணாமல் போன தனது மகள் என கூறி உள்ளார்.

இது குறித்து குஜராத் காவல் துறையினர், “ஆந்திராவை சேர்ந்த ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் எங்களை அணுகினார்.  ஆறாம் தேதி அன்று நாங்கள் கண்டெடுத்த சிறுமியின் சடலம் தனது மக்ள் என தெரிவித்தார்.   கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து அவர் மகள் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

அவர் தனது மகளின் புகைப்படம் என எங்களிடம் கொடுத்த புகைப்படமும் சடலத்தின் புகைப்படமும் ஒத்துப் போகிறது.   மேலும் காணமல் போன தனது மகளின் ஆதார் அட்டை நகலையும் கொடுத்துள்ளார்   இது குறித்து உறுதி செய்ய விரைவில் மரபணு சோதனை நடைபெற உள்ளது”  எனத் தெரிவித்துளனர்