திருப்பதி:

ந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அம்மாநில காவல்துறை சுற்றிவளைத்தது. அப்போது வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஸ்ரீவாரிமெட்டு மற்றும் இடக்கலபாவி பகுதிகளில் செம்மரக் கடத்தல் நடைபெறுவதாக அம்மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு காவல்துறை விரைந்தது. அங்கு தமிழகத்தைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர் செம்மரங்களை கடத்தி வாகனங்களில் ஏற்ற முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களை ஆந்திர காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது கடத்தல்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்கினர். இதில் காவலர் லட்சுமி நாராயணன் என்ற காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கடத்தல்கார்ர்களை எச்சரிக்கும் விதமாக, காவல் துறையினர் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதன் பிறகு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், செம்மரக்கடத்தல்காரர்க்களுக்கு பைலட் போல் செயல்பட்ட முருகேசன் என்பவரைக் கைது செய்தனர்.